‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்க வில்லையா’ என்று வரும் திருக்குர்ஆன் வசனங்களை வைத்து பூமி தட்டையானது என்று திருக்குர்ஆன் சொல்வதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர் ஆனால் உண்மையில் இப்படி பிரச்சாரம் செய்வதன் மூலமாகத்தான் திருக்குர்ஆன் எண்ணற்ற பல அறிவியல் உண்மைகளை சொல்கிறது என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது இப்படி விஷப் பிரச்சாரம் செய்தவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
- பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
(அல்குர்ஆன் : 71:19)
மேலும் இதே சொற்றொடரில் (2:22 ,13:3,15:19 ,20:53 ,43:10 ,50:7 ,51:48 ,55:10 ,71:19 78:6,79:30,84:3) ஆகிய வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.
‘அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்’. (அல்குர்ஆன் 71:20)
பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. 3,750 ‘ஆரம’; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் – சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது – முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் – பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.
- விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் – மற்ற இடங்களிலும் பரப்பலாம்.
பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் – பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து – ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் – மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக விரிப்புகள் – நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.
- பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:
பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம்
‘ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.:
(அல்குர்ஆன் : 29:56)
சுற்றுப்புற – சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்ல முடியாது.
- எதற்காக விரிக்கப்பட்டுள்ளது
அவனே பூமியை விரித்து…-நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (13:3)
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம். (15:19)
இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். (51:48)
மேற்கண்ட வசனங்களிலெல்லாம் இறுதியாக அவனது வல்லமையின் வெளிப்பாட்டு வாக்கியம் அமைந்திருப்பதை காணலாம்.
அடுத்து பயன்பாட்டிற்காக.,
மனிதர்களுக்கும்-ஏனைய படைப்பினங்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இப்பூமியை விரிப்பாக்கி வைத்திருப்பதாக சொல்கிறான். அதாவது பயணம் செய்வதற்கு இலகுவாக பயணிப்போருக்கு வசதியாக பாதைகள் இருக்க பூமியை ஒரு விரிப்புப்போல அமைத்திருக்கிறான்
இன்னும், பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். (55:10)
“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; (20:53)
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். (43:10)
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். (71:19)
“அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (71:20)
”…அவனே பூமியை விரித்தான்.” (79:30)
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். (79:31)
ஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும்- ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது. இங்கு பூமி விரிப்புபோல் இருக்கிறது என்று ஒரு பயன்பாட்டு பொருளாக தான் (Materiel) உருவகப்படுத்தப்படுகிறதே தவிர தட்டையாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருப்பதாக வடிவத்தை (Shape) முன்னிருத்தி கூறவில்லை.
ஏனெனில் வடிவம் குறித்து இவ்வாசக அமைப்புகள் அமைக்கப்பெற்றிருந்தால் பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். என்று பூமி விரிக்கப்பட்டதன் பயன்பாட்டு நோக்கத்தை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.மாறாக அதன் வடிவத்தை மட்டும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கலாம்.
ஆக, விரிப்புப்போல் இருக்கிறது என்பது தட்டை வடிவம் என்பதோடு பொருந்தாது எனவே மேற்குறிய வசனங்கள் மட்டுமல்ல குர்-ஆனில் பூமி குறித்து சுமார் 457 வசனங்களில் 483 முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் அறிவியலுக்கு முரணாக தட்டை வடிவத்தை முன்னிறுத்தி எந்த வசனமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
- இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்
பூமியை விரிப்பாக்கவில்லையா என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு இஸ்லாமிய அறிஞர்கள் பலர் தட்டை என்று விளக்கம் சொல்லி விட்டதாக சிலர் வாதாடுகின்றனர் ஆனால் நாம் பார்த்தவரை அதிகமான அறிஞர்கள் பார்ப்பதற்கு தட்டையாக தோன்றினாலும் பூமி உருண்டை தான் என்பதை திருக்குர்ஆன் சொல்வதாகவே தங்களின் விளக்க உரையிலே எழுதியுள்ளார்கள்
பூமி வட்டமானது என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர், ஆனால் மனித கண்களுக்கு அது தட்டையாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அது மிகப் பெரியது மற்றும் அதன் வட்டம் அல்லது வளைவை நெருங்கிய தூரத்தில் காண முடியாது. எனவே பூமியில் நின்று பார்ப்பவர் அதை தட்டையாகவே பார்க்கிறார், ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, உண்மையில் அது வட்டமானது.
இமாம் அர்ராஸி(ரஹ்) அவர்கள்,
(அல்குர்ஆன் 78:7) வசனத்திற்கு விளக்கம் தரும் பொது
பூமி, அது வட்டமாக இருந்தாலும், ஒரு மகத்தான கோளமாகும், மேலும் இந்த மகத்தான கோளத்தின் ஒவ்வொரு சிறிய பகுதியும் பார்க்கும்போது, தட்டையாகத் தோன்றுகிறது. என்று குறிப்பிடுகிறார்.
(தஃப்ஸீர் அர்ராஸி 19/131)
ஷெய்க் அஷ்ஷாங்கதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
பூமி, பார்பவரின் கண்களுக்கு தட்டையாக தோன்றுகிறது. ஆனால் அது உண்மையில் கோள வடிவமானது.
(அத்வா அல் பயான் 8/428)
ஷெய்க் ரஃபீ அத்தீன் இப்னு வலியுல்லாஹ் அத்தஹ்லவி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
(அல்குர்ஆன் 78:6)
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
(அல்குர்ஆன் 79:30)
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
(அல்குர்ஆன் 88:20)
இந்த வசனங்களில் அல்லாஹ் பூமியை விரித்தான் என்று குறிப்பிடுவது எல்லாம் நாம் ஆய்வு செய்து பார்க்கும் போது பூமி பார்ப்பதற்கு தட்டையாக தோன்றினாலும், உண்மையில் அது உருண்டையானதாகும்.
(ஃபத் அல் பயான் 15/208)
இமாம் அபுல் ஹுசைன் அஹ்மத் இப்னு அல் முனாதி (ரஹ்) அவர்கள் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து அறிவிக்கும் போது “பூமியானது பந்து வடிவத்தை போன்றது என்பதில் ஆரம்ப கால அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருந்துள்ளனர்.”என்று குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து இமாம் இப்னு தைம்மியா (ரஹ்) அவர்கள் கூறும்போது
“நிலம் மற்றும் கடல் ஆகியவற்றை கொண்டுள்ள பூமியானது பந்து போன்ற வடிவத்தை உடையது. காரணம் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் மீது எழுவதில்லை, மாறாக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நேரத்தில் எழுகிறது. என்பதை வைத்தும் குறிப்பிடுகிறார்.”
(மஜ்மூ ஃபதாவா 25/195)