இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள ஆன்மிக உரிமைகள்

ஏராளமான உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருந்தாலும் சமய, ஆன்மீக உரிமைகளை மட்டும் முதலில் காண்போம்.

மேற்குலகில் இஸ்லாமைக் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் நிலவிவருகின்றன.அவற்றில் ஒன்று சொர்க்கம் தொடர்பானது.சொர்க்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது;அங்கே பெண்களுக்கு எந்த வேலையும் இல்லை; பெண்களால் சொர்க்கத்துக்குள் நுழையவே முடியாது.இத்தகைய எல்லா கருத்துக்களையும் இஸ்லாம் நிராகரிக்கின்றது.இவற்றை மறுக்கும் ஏராளமான வசனங்களை குர்ஆனில் காண முடியும்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 4:124)
மற்றோரு இடத்திலும் குர்ஆன் இதனை பற்றி சொல்கிறது.

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.(அல்குர்ஆன் : 16:97)

ஆணாக இருப்பதோ பெண்ணாக இருப்பதோ சொர்க்கத்திற்கு செல்ல காரணமாக அமையாது.சொர்க்கத்துக்கு போக வேண்டுமென்றால் நல்ல செயலை செய்த முஃமினாக இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கிறது.இஸ்லாமிய போதனைகள் காலங்கடந்தவை ; நவீன காலத்திற்கு பொருந்தி வராதவை என்று இப்போ கூறமுடியுமா?

பெண்ளுக்கு ஆன்மா இருக்கிறதா? இல்லையா? பெண்களுக்கு ஆன்மா இல்லை என்றே இஸ்லாம் சொல்கின்றதாக மேற்குலகின் ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.பெண்களுக்கு ஆன்மா என்பதே கிடையாது என்று கிறிஸ்தவம் தான் கூறுகிறது.ஆனால், இஸ்லாமும் அவ்விதமே கூறுவதாக மக்கள் தொடர்பு சாதனங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன.

கிபி 11ஆம் நூற்றாண்டில் ரோமதேசாத்தில் கூடிய கிறிஸ்தவ அறிஞர் பெருமக்கள் பெண்களுக்கு ஆன்மாவே இல்லை என ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.(இந்த கருத்துக்கு ஈஸா (அலை) அவர்களுடைய போதனைகளில் இடமே இல்லை என்று தான் முஸ்லிம்கள் கூறுகின்றனர்).

இஸ்லாமை பொருத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை! திருக்கீர்ஆன் அத்தியாயம் அந்நிஸாவின் முதல் வசனத்திலே அது தெளிவாக்கப்பட்டது.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:1)

அல்லாஹ் இன்னுமோர் இடத்தில் கூறுவதாவது,
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?(அல்குர்ஆன் : 16:72)

மற்றுமொரு இடத்தில் கூறுகையில்,
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.(அல்குர்ஆன் : 42:11)

ஆண்களுக்கு மட்டும் ஆன்மா உண்டு, பெண்களுக்கு ஆன்மாவே கிடையாது என்ற வகையிலான பாகுபாட்டை எல்லாம் இஸ்லாம் சொல்லவுமில்லை ; அவ்வாறு கருதவுமில்லை என்பதை மேற்கண்ட இறைவசனங்களிலிருந்து விளங்கிக்கொண்டோம்.இஸ்லாமிய போதனைகளில் நவீனம் இருக்கிறதா ? இல்லை,பழங்கால சட்டங்களா என்பதை இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.முதல்மனிதன் ஆதாமை படைத்தபோது நடந்தவற்றை இறைவன்கூறும்போது,
என்னுடைய கைகளால் அவரைப்படைத்து அவரில் என்னுடைய ரூஹை அதாவது உயிர்மூச்சை ஊதியவுடன் நீங்கள் அனைவரும் நெடுஞ்சாண்கிடையாக ஸஜ்தாவில் விழுந்துவிடவேண்டும் (அல்குர்ஆன் 15:29) என வானவர்களிடம் இறைவன் அறிவித்தான்.

இதே விஷயத்தை அத்தியாயம் ஸஜ்தாவில் கூறும்போது,
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் – இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.(அல்குர்ஆன் : 32:9)

இந்த வசனங்களில் ரூஹை அதாவது உயிர்மூச்சை ஊதினான் என்று கூறப்பட்டுள்ளதைப் பார்த்து யாரும் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது.இறைவன் முதல் மனிதரின் உடலில் தன்னை வெளிப்படுத்தினான் என்றோ ,அவதரித்தான் என்றோ அர்த்தம் கொள்ளக்கூடாது.தனிப்பட்ட கவனமும் அக்கறையும் கொண்டு தன்னுடைய நேரடிப்பார்வையில் முதல் மனிதரை இறைவன் உண்டாக்கினான் என்பதையே இங்கு குர்ஆன் சொல்லவருகின்றது.அல்லாஹ்வுத்தஆலாவுடைய அந்த ஆற்றலையும் வல்லமயையும் மனதில் கொண்டால் எத்தகைய மனிதனும் இறைவனை நெருங்க முடியும்.
ஆக எந்த ரீதியில் ஆராய்ந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு கிடையாது.ஆதம், ஹவ்வா இரண்டு பேரையும் குறித்துத் தான் குர்ஆன் பேசுகிறது.இருவரையும் சரிசமமாக வைத்தே பேசுகிறது.
அவ்வாறே பூமிப்பரப்பின் மீதாக மனிதனுக்கு இறைவனுடைய பிரதிநிதித்துவமாகிய கிலாஃபத் கொடுக்கப்பட்டுள்ளது.மனிதன் என்ற இனத்துக்குதான் இந்தச் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (அல்குர்ஆன் : 17:70)

ஆதமுடைய சந்ததி அது ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம்- இருபாலாருக்கும் இங்கே கூறப்பட்டுள்ள சிறப்புகள் பொருந்தும்.
வேறு ஒரு கோணத்தில் இருந்தும் இந்த பிரச்சனையை நாம் ஆராயலாம்.உலக மனிதர்கள் வேதங்கள் என கருதும் சில நூற்களில் சொர்க்கத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டதற்கும் ஆதமுடைய வீழ்ச்சிக்கும் அந்த பெண்ணான ஹவ்வாதான் காரணம் என கூறப்பட்டுள்ளது.உதாரணமாக பைபிளில் சொர்க்க பூங்காக்களிலிருந்து ஆதம் வெளியேறியதற்கு பெண் தான் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாற்றமான கருத்தையே இஸ்லாம் முன்வைக்கிறது.

நீங்கள் குர்ஆனை வாசித்து பார்த்தீர்களென்றால் பல இடங்களில் இவ்வரலாற்றைப்பற்றி கூறப்பட்டுள்ளதை காணலாம்.உதாரணமாக அத்தியாயம் அஃராஃபின் 19வது வசனத்தில் இதை காணலாம்.ஆதமையும் ஹவ்வாவையும் ஒரே இடத்தில் வைத்து தான் கூறப்பட்டுள்ளது.இருவருமே தவறிழைத்தனர்.இருவருமே தனது தவறுக்கு வருந்தி பாவமன்னிப்பு கோரினர். இருவரையுமே ஒருசேர அல்லாஹ் மன்னித்தான்.

இவற்றை படித்தகையோடு பைபிளுடைய தொடக்கநூல் (ஆதியாகமம்) மூன்றாவது அத்தியாத்தை வாசித்து பாருங்கள்.நடந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் ஹவ்வாவையே பொறுப்பாக்கி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளதைக் காண்பீர்கள்.ஹவ்வா குற்றவாளி என்று சொன்னதோடு நிற்காமல், அனைத்து மனிதர்களும் பிறவிலேயே குற்றவாளிகள் என்ற சித்தாந்தத்தையும் உருவாக்கினர்.

அவர் பெண்ணிடம்,’உன் மகப்பேறின் வேதனையை மிகுதியாக்குவேன்.வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய்.ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்.அவனோ உன்னை ஆள்வான் என்றார்.(தொடக்கநூல் அத்தியாயம் மூன்று)
சொர்க்கத்திலிருந்து வெளியேறியதற்கு காரணமே பெண்தான்! அதற்காகத்தான் அவளுக்கு மகப்பேற்றின் துன்பம் கொடுக்கப்படுகிறது.பெண் என்பவள் எந்த அளவுக்கு கீழ்த்தரமாகவும் அவமான பிறவியாகவும் சித்தரிக்கப்படுகிறாள் என்பதற்கு இந்த உதாரணமே போதும்.ஆனால் மறுபக்கம் அதே வேதனையைப்பற்றி கூறும் குர்ஆன் ,பெண்ணின் பெருமைக்கும் மேன்மைக்கும் அதை குறியீடாக்குகின்றது.கீழ்வருகின்ற இறைவசனங்களை வாசித்து பாருங்களேன்,
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:1)

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”(அல்குர்ஆன் : 31:14)

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.(அல்குர்ஆன் : 46:15)

தாய்மை அடைவதை இஸ்லாம் எந்த அளவுக்கு பெருமையாகக் கருதுகிறது என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.இதன் காரணமாகவே பெண்ணை மிக உயர்வான இடத்தில் இஸ்லாம் வைக்கின்றது.இவற்றைப் படித்த பின்பு உங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது? பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகள் யாவும் காலங்கடந்தவை என்று எண்ணத்தோன்றுகிறதா?

அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தையும் மதிப்பையும் பெற வேண்டுமென்றால்,இறையச்சம் கட்டாயம் தேவை. இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் கௌரவம் பெறுகிறார்கள்.அல்குர்ஆன் இதை வெகு அழகாக விளக்குகின்றது.

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 49:13)

பிறந்த இனமோ,குலமோ,நிறமோ,பேசும் மொழியோ, ஈட்டிய செல்வமோ கண்ணியத்தை பெற்றுத்தராது.அல்லாஹ்விடம் கண்ணியத்தை பெறவேண்டுமென்றால் ,ஒரே ஒரு பொருள் இருந்தாதான் முடியும்.அதுவே இறையச்சம் அதாவது தக்வா!நீங்கள் பிறந்த இனத்தின் காரணமாக நீங்கள் அல்லாஹ்விடம் தகுதியையும் பெறமாட்டீர்கள்; தண்டனையையும் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள்.
வேறொரிடத்தில் குர்ஆன் முழங்குவதைக் கேளுங்கள்.

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.(அல்குர்ஆன் : 3:195)

இன்னும் கேளுங்கள் :-
*நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;

அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.*(அல்குர்ஆன் : 33:35)
ஒழுக்கக் கடமைகள் ஆகட்டும்;ஆன்மிக விஷயங்களாகட்டும்,ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை என்பதையே இவ்வசனங்கள் அனைத்தும் ஒருசேர நின்று நமக்கு உணர்த்துகின்றன.அவ்விதமே அவர்கள் செய்தாகவேண்டிய கடமைகளிலோ அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளிலோ இஸ்லாம் எந்தவித பாகுபாட்டையும் வைக்கவில்லை.தொழுவதும் நோன்பு நோற்பதும் ஜகாத் கொடுப்பதும் ஆண்கள் மீது கடமையாக உள்ளதைப் போலவே பெண்கள் மீதும் கடமையாக உள்ளது.

இருப்பினும் பெண்களுக்கென்று ஒருசில சிறப்புச் சலுகைகளை கூடுதலாக இஸ்லாம் வழங்கியுள்ளது.
மாதந்தோறும் வரும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தொழத்தேவையில்லை என்று இஸ்லாம் விடுவித்துள்ளது.அத்தொழுகைகள் அவர்கள் மீது கடமையாவதே இல்லை.அவ்வாறே மாதவிடாய் காலங்களிலும் பிரசவத்தீட்டுக் கலங்களிலும் பெண்கள் நோன்பு வைக்கத்தேவையில்லை.வேறு எதாவது சமயங்களில் விடுப்பட்ட நோன்புகளை நோற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றது.
இவற்றை அனைத்தையும் நான் உங்களுக்கு முன்னால் வைத்துவிட்டேன்.இப்போது நீங்களே சொல்லுங்கள், பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்ற உரிமைகள் காலங்கடந்தவையா? அல்லது இன்றும் தேவைப்படுகின்ற நவீன உரிமைகளா?

Leave a Response