டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் – இயேசு பிறந்த தினமா???

வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் – இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது. 

உலகம் இந்த அண்ட சராசரங்களை படைத்த – பிறப்பும் இறப்பும் இல்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத கர்த்தருக்கே(?) பிறந்த நாளா? என்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்த கர்த்தர்(?) பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா? அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா? அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா? என்றால் எந்த ஒரு ஆதாரமும் எதிலும் கிடையாது. மாறாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதமாக இருக்காது என்பதற்கு வேண்டுமானால் மிகத் தெளிவான ஆதாரங்கள் பைபிளிலே இருக்கின்றது. அதை இனி பார்ப்போம். 

இயேசு பிறந்தது எப்போது

இயேசு பிறந்த காலகட்டத்தையும், அவர் பிறக்கும் போது நடந்த சில நிகழ்வுகளையும் லூக்கா தனது சுவிஷேசத்தில பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:  

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது அவர்கள் மிகவும் பயந்தார்கள். – லூக்கா 2:1-9

இந்த வசனங்களில், சொல்லப்பட்டுள்ள கருத்தை நாம் உற்று நோக்கினால், கண்டிப்பாக இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

ஏனெனில், இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அத்தனை நிகழ்வுகளும் கண்டிப்பாக கடும் குளிர் நிறைந்த டிசம்பர் மாதத்தில் நடக்கும் சம்பவங்களே அல்ல என்பது தான் நாம் இங்கே கவணிக்கவேன்டிய மிக முக்கியமான கருத்து. காரணம், இந்த வசனங்களில் லூக்கா பின்வரும் சில நிகழ்வுகளை தனது சுவிஷேசத்தில் கோடிட்டுக்காட்டுகின்றார்:

•    அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 

•    அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

•    அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கே குறிப்பிடப்படும் முக்கியமான இந்த மூன்று நிகழ்வுகளில், எந்த ஒரு நிகழ்வும், கண்டிப்பாக குளிர் காலங்களில் – அதுவும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் – நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம். 

முதலாவதாக, எந்த ஒரு அரசனும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக, குளிர்காலங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம், அப்படிப்பட்ட நாட்களில் பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது. அதுவும் வாகன வசதியே இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது இது அறவே சாத்தியமில்லாதது. ஆனால் லூக்கா இயேசு பிறந்த போது அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள் என்று குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் பார்த்தால், கண்டிப்பாக இயேசு கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது. 

அடுத்து, கர்ப்பவாதியான ஒரு பெண் சாதாரன நாட்களிலேயே கூட பல இடங்களுக்கும் அலைந்து திரியமுடியாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மரியாள், எந்த வாகன வசதியும் இல்லாத அன்றைய காலத்தில் பல மைல் தூரமுள்ள கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் செல்கின்றார் என்றால், குளிர் நிறைந்த காலங்களான டிசம்பர் மாதத்தில் சென்றிருப்பார்களா? அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் – ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா? என்பதை சிந்தித்தாலே கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியில் தான் இயேசுவின் பிறப்பு நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். எனவே இதைவைத்து பார்த்தாலும் இயேசு கண்டிப்பாக கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது. 

அதைவிட மிக முக்கியமாக அவர் பிறந்த போது, இரவு நேரத்தில், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இரத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மேய்பர்கள் வயல்வெளியில் தங்கி இரவுக் காலங்களில் மந்தைகளைக் காத்துக்கொண்டிருப்பது எந்த காலமாக இருக்கும்? குளிர் நிறைந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா? அல்லது கோடைகலாத்தின் பிற்பகுதிகளான, ஜூன் – ஜூலை மாதங்களிலா? என்பதை நாம் சிந்தித்தாலே இது கண்டிப்பாக கோடையில் பிற்பகுதிகளில் தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில், எந்த ஒரு பகுதியிலும் கடும் குளிர் அடிக்கும் டிசம்பர் மாதங்களில் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்க மாட்டார்கள் – தங்கவும் முடியாது. அதுவும் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது சாத்தியமா? என்பதை எல்லாம் கவனித்தால், இந்த சம்பவம் கண்டிப்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவாகும். 

லூக்காவின் 2:1-9 வசனங்களின்படி இயேசுவின் பிறப்பு எப்போது நடைபெற்றிருக்கும் என்றால் கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியான ஜூன் – ஜூலை மாததங்களில் தான் என்பது தெளிவு. எனவே கண்டிப்பாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல.

இயேசுவின் பிறந்தநாளை அவரோ அல்லது அவரது சீடர்களோ கொண்டாடியாதாக எந்த ஒரு ஆதாரமும் பைபிளிலோ அல்லது வரலாற்று ஆதாரங்களிலோ இல்லாதபோது, அதற்கு மாற்றமாக அவரது பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்தவர்கள், தங்களது வேதத்திற்கு முரணில்லாத வகையில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருந்தால், எந்த ஒரு கேள்வியும் யாருக்கும் எழப்போவதில்லை. ஆனால், லூக்கா சுவிஷேசத்தின் படி மிக மிகத் தெளிவாக டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுத் தெரிந்தும் அந்த நாளை ஒரு பண்டிகைத் தினமாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அவர்கள எந்த அளவுக்க பைபிளை விட்டு இயேசுவின் போதனைகளை விட்டு வெளியேறி மனித கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பது நன்றாகப் புரியும். 

இதை பிஷப் பர்னஸ் என்பவர் தனது ‘Rise of Christianity’ எனும் நூலில் ஒப்புக்கொள்கின்றார்: 

‘மேலும் டிசம்பர் 25 ஏசுவின் பிறந்த நாள் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. லூக்காவில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியான – பெத்லகேமுக்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் அப்போது இடையர்கள் தங்கள் மந்தைகளை இரவுக் காலங்களில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு நாம் ஏதும் மதிப்பு கொடுப்பதாயிருந்தால் நிச்சயமாக இயேசுவின் பிறப்பு குளிர்காலத்தில் நிகழவில்லை. குன்றுகள் நிறைந்த யூதேயா பகுதிகளில் குளிர்கால இரவுகளில் தட்பவெப்ப நிலை பனி உரைந்து மிகவும் தாழ்ந்து இருக்கும். பல கடுமையான வாதங்களுக்குப் பின்னரே நமது கிறிஸ்துமஸ் நாள் ஏறக்குறைய கி.பி 300 வாக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது.’ 

இதைத்தான் தி ஆக்ஸ்போர்ட் டிஷ்னரி ஆஃப் கிறிஸ்டியன் சர்ச்‘ என்ற நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்று (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280 

ஆக, இயேசுவின் பிறந்த தினம் என்பது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இன்றி, இவர்களால் கற்பனையாக ஏற்படுத்த ஒன்று என்பதை இவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள். 

இவர்களைக் குறித்து தான் ஏசாயா 29:13ல் ‘இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது என்று கூறப்படுகின்றது.

எப்படி இயேசு கடவுள் இல்லை, அவரை வணங்கக்கூடாது என்பதற்கு பைபிளிலே தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரை கடவுள் என்று கிறிஸ்தவர்கள் வணங்கிக்கொன்றார்களோ அது போல், இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அதையும் மீறி அவர்கள் அந்த நாளை சிறப்பு தினமாக, பண்டிகை நாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால், அவர்கள் இயேசுவையோ அல்லது இயேசுவின் கொள்கைகளையோ ஒரு போதும் பின்பற்றவில்லை, மாறாக அவர்கள் புறமத கலாச்சாரங்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகளையுமே பின்பற்றுகின்றார்கள் என்பது தெளிவாக விளங்கும். 

எனவே, இயேசு டிசம்பர் 25 – பிறக்கவில்லை என்பது மேற்கூறப்பட்டுள்ள பைபிள் வசனங்களிலிருந்தே தெளிவாக தெரிகின்றது

Leave a Response