முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதேன் இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது

முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதேன்

இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூசுப், யூனுஸ், தாவூத், சுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள். இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய் மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.

மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச்சொல் அன்று.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.

நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம்.

இந்தோனேசிய முஸ்லிம்கள் சுக்ரனோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களை தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.

அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?

சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன. இஸ்லாமிய மார்க்கம் வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.

நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்த சாதி என்று கேட்கும் வழக்கம் உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள். ஆனால் நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் சாதி என்ன என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையை நாடித் தான் தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.

இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.

சட்டத்தில் தான் ஜாதி ஒழிந்ததே தவிர மனதில் நீங்கவில்லை 

‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.’ –  குர்ஆன்_14_4

மேலும் முகமது நபி(ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.

“’மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்’ என்று சொன்னார். –

மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

ஆக எங்கள் தாய்மொழியான தமிழை நேசிக்கிறோம் , தமிழ்நாட்டை நேசிக்கிறோம் குறிப்பாக இருக்கும் நகரத்தை/மாவட்டத்தை அதிகம் நேசிக்கிறோம்.[2]

Leave a Response