இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

கேள்வி : இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

பதில் : இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறிவோம் 

இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:

அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு – அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆண்களுக்குரிய ‘ஹிஜாப்’ :

வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் ‘ஹிஜாப்’ முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான்.

24:30 قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ 
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் – வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் – அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய ‘ஹிஜாப் :

24:31 وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.

2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. 
இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் – பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது

மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் – இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு – தனது கண்களிலும் – தனது உள்ளத்திலும் – தனது எண்ணத்திலும் – இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது – ஒருவர் நடக்கும் விதத்திலும் – அவர் பேசும் விதத்திலும் – அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

33:59 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ 

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

இரட்டை சகோதரிகள் – ஓர் உதாரணம்

இரட்டைப் பிறவியான சகோதரிகள் – இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் – மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் – கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?.

கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் – தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது – பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் – பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் – பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் – மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் – சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது – பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் – அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே – பெண்விடுதலை என்கிறார்கள். ‘கலை’ மற்றும் ‘கலாச்சாரம்’ என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 

1990 ஆம் ஆண்டில் – அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு – 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் ‘தீவிரமாக’ பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய ‘ஹிஜாப்’ முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் – அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி – மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் – அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் – அமெரிக்காவில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – பாலியல் குற்றம் கண்டிப்பாக குறையும்

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் – ஐரோப்பாவாக இருக்கட்டும் – அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ – அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். 

-ZAKIR NAIK 

Leave a Response