இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்? இஸ்லாம் திசையை வணங்க சொல்கிறதா ???

கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல் உள்ளதே விளக்கவும்?
இஸ்லாம் திசையை வணங்க சொல்கிறதா ???

பதில் : கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை

2:144 قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏ 

2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும், விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர்.

மக்கா நகரில் கஃபா எனும் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. மேற்குத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.

மக்காவில் அமைந்த கஃபா ஆலயம் இந்தியாவுக்கு மேற்கில் உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி ஏக இறைவனை வணங்குகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு நோக்கித் தொழ மாட்டார்கள். தொழவும் கூடாது.

மக்காவிற்கு மேற்கில் உள்ளவர்கள் கிழக்குத் திசை நோக்கியும், மக்காவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்குத் திசை நோக்கியும் மக்காவுக்கு தெற்கே உள்ளவர்கள் வடக்குத் திசை நோக்கியும் தொழுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத் திசை நோக்கித் தொழுதால் தான் முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்ற விமர்சனத்தில் உண்மை இருக்க முடியும்.

முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குகிறார்கள் எனக் கூறுவது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். கஃபாவின் திசையை வணங்குகிறார்கள் என்று கருதலாம் அல்லவா? என்று மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதுவும் கூட தவறான எண்ணம் தான். ஒன்றை நோக்குவது அதை வணங்குவதாக ஆகும் என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

மனிதர்கள் எல்லா நிலையிலும் ஏதேனும் ஒரு திசையை நோக்காமல் இருக்க முடியாது. ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் ஏதேனும் ஒரு திசையை நோக்குவதைத் தவிர்க்கவே இயலாது. எனவே நோக்குவதையெல்லாம் வணக்கம் என்று யாருமே கூற மாட்டார்கள். வணங்குவது வேறு, நோக்குவது வேறு. இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

ஒரு பொருளை வணங்குவது என்றால் நமது குறைகளைத் தீர்க்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. நாம் தவறு செய்தால் நம்மைத் தண்டிக்கும் வலிமையும் அதற்கு இருக்கிறது என்று நம்பி அதையே கடவுளாகப் பாவித்தால் தான் அதை வணங்குகிறார்கள் எனக் கூற முடியும்.

கஃபா எனும் ஆலயத்தைப் பற்றி முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்களா? நிச்சயமாக இல்லை.

கஃபா ஆலயம் நம்மைப் பாக்காது. நமக்கு எந்த உதவியும் செய்யும் ஆற்றல் அதற்குக் கிடையாது. நாம் செய்யும் தவறுகளுக்காக அந்த ஆலயத்தால் நம்மைத் தண்டிக்க முடியாது. மற்ற பொருட்களெல்லாம் அழிந்து போகும் போது அந்த ஆலயம் கூட அழிந்து போய்விடும் என்று தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படித் தான் நம்ப வேண்டும்.

கஃபா ஆலயமே! நீ தான் எங்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு ஞானமுள்ள முஸ்லிம்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கவும் கூடாது.

கஃபா எனும் ஆலயத்தை நோக்கித் தொழுமாறு கட்டளையிடும் திருக்குர்ஆன் அக்கட்டளையுடன் முக்கிய அறிவுரையையும் சேர்த்துக் கூறுகிறது.

”நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உள்ளது.

(அல்குர்ஆன் 2 : 15)

என்பது தான் அந்த அறிவுரை.

கஃபாவை நோக்கும் போது கஃபா தான் கடவுள் என்றோ கஃபாவுக்குள் தான் கடவுள் இருக்கிறான் என்றோ எண்ணி விடக் கூடாது. என்று தெளிவாக அறிவுறுத்தி விட்டுத்தான் கஃபாவை நோக்குமாறு குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் மேற்கையும் வணங்கவில்லை. கஃபாவையும் வணங்கவில்லை. கஃபா இருக்கும் திசையையும் வணங்கவில்லை. மாறாக கடவுளின் கட்டளைப்படி கஃபாவை நோக்கியவர்களாக அந்த ஒரு கடவுளைத் தான் வணங்குகிறார்கள்.

கஃபாவை நோக்கி முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தான் வணங்குகிறார்கள் என்பதை தொழுகையில் கூறப்படும் ஜெபங்களிலிருந்தும் உறுதி செய்யலாம்.

தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹ் பெரியவன் என்று தான் முஸ்லிம்கள் கூறுவார்கள். தொழுகையின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போதும் அல்லாஹ் பெரியவன் என்று தான் கூறுவார்கள். தொழுகைக்கு உள்ளேயும் அல்லாஹ்வைத் தான் புகழ்வார்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். கடவுளை வணங்கும் போது நோக்குவதற்கு கஃபா ஆலயத்தைக் குறிப்பாக ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்திற்கும் திருக்குர்ஆன் தெளிவான விடையை வைத்திருக்கிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி கடவுள் ஒரே ஒரு ஜோடி மனிதர்களைத் தான் படைத்தான். அந்த ஒரே ஒரு ஜோடியின் மூலமாகத் தான் மனித குலம் பல்கி இன்று அறுநூறு கோடியைத் தாண்டியுள்ளது.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதாம், இப்போது மக்கா நகரம் என்றழைக்கப்படும் பகுதியில் இப்போது கஃபா ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரே இறைவனை வணங்கவதற்காக ஒரு ஆலயத்தை எழுப்பினார்.

உலகில் ஒரே கடவுளை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் அதை நோக்கித் தொழுகை நடத்துமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. கஃபா ஆலயத்தை நோக்குமாறு கட்டளையிட்டதற்கு இது தான் முக்கிய காரணம்.

மனித சமுதாயத்திற்கு (இறைவனை வணங்குவதற்காக) முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ள ஆலயமாகும்.

(அல்குர்ஆன் 3 : 36)

முதன் மனிதரால் உலகின் முதல் ஆலயமாக எழுப்பப்பட்ட ஆலயத்தை நோக்கி அந்த ஒரே இறைவனை வணங்குவது மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.

கஃபா ஆலயத்தை முஸ்லிம்கள் வணங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம்.

கஃபா ஆலயம் எத்திசையில் இருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியாத நிலை ஒருவருக்கு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் இருப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம். தொழுது முடித்த பின்னர் அவர் தொழுதது கஃபாவுக்கு எதிரான திசை என்பது தெரிய வந்தால் ஏற்கனவே தொழுததை மீண்டும் தொழ வேண்டியதில்லை என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

கஃபா ஆலயம் தான் வணங்கப்படுகிறது என்றிருந்தால் கஃபா ஆலயம் இருக்கும் திசை தெரியாவிட்டால் தொழக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருக்கும். அல்லது தொழுத பின் கஃபா இருக்கும் திசையில் தொழவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கட்டளையிடப்படாததால் முஸ்லிம்கள் கஃபாவைக் கடவுளாகக் கருதுகிறார்கள் என்பதும், கஃபாவை வணங்குகிறார்கள் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் சிலருக்கு மற்றொரு சந்தேகம் ஏற்படலாம்.

கஃபாவை நோக்கி கடவுளை வணங்குமாறு கூறாமல் அவரவர் விருப்பத்தின் பால் இதை விட்டு விடலாமே! என்பதே அந்தச் சந்தேகம்.

1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது: 

உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் – ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு – கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள். 

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது. 

இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா – உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் – மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது – உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் – கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான். 

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே! 

இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்: 

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் – நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் – எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?

[ ஜாகிர் நாயக் அவர்களின் உரைகளில் இருந்தும் பி.ஜெய்னுலாபிதீன் அவர்களின் உரைகளில் இருந்தும் எடுக்கப்பட்டது ]

Leave a Response