அளவற்றோனின் திருநாமம் போற்றி..
மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பிணைந்துள்ளனர்.
எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்புகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமை தான், சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத் தான் செய்கின்றோம்.
நம்மில் பலா், சிந்தித்து ஓரு இறைவன் தான் இருக்கமுடியும் என நம்பிக்கை கொண்டாலும்கூட, அந்த இறைவனை குறித்து சரியான புரிதல் இல்லாமல், சரியாக வணங்காமல் மாறு செய்கிறோம் . இது குறித்த ஞானத்தை அறிந்துக் கொள்வதற்கு முன்னர், இறைவனின் இலக்கணத்தை பற்றிய ஞானத்தை அறிவதும் அவசியமாகும். இப்போது நீங்கள் இக்கட்டுரையை, உங்கள் போனில் படித்துக்கொண்டிருக்கிறீா்கள் அல்லவா??? நான் இப்போது உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் இப்போது கையில் வைத்திருப்பது போன் அல்ல, அது ஒரு புத்தகம் என்கிறேன். அதை நீங்கள் ஏற்பீா்களா….? அட போப்பா, ஃபோனை பாத்து புக் ங்குரீயே!!! என்று சொல்வீர்கள் தானே!!
ஒவ்வொரு பொருளையும் நாம் எப்படி அதனை அறிந்து வைத்திருக்கிறோம்.? அதன் இலக்கணத்தை புரிந்துக் கொண்டு தானே!!! ஃபோனின் தோற்றம்,அதனை கொண்டு பிறருக்கு கால் செய்யலாம், மெசேஜ் அனுப்பலாம்!! இதுவே ஃபோனின் இலக்கணம். புத்தகம் என்றால், தாள்கள் இருக்கும், எழுத்துகளை கொண்டிருக்கும். இதுவே புத்தகத்தின் இலக்கணம், இவ்வாறு இலக்கணத்தை கொண்டு தான் நாம் ஓரு விஷயத்தை அறிந்துக் கொள்ளமுடியும்.. அவ்வாறே கடவுளை பற்றி சரியான முறையில் அறியவும், கடவுளின் இலக்கணத்தை அறிந்து கொள்வதும் அவசியம், கடவுளை தான் யாரும் பாா்க்கவேயில்லயே, பிறகு எவ்வாறு இலக்கணங்களை வரையறுப்பீா்கள் என கேள்வி எழலாம்..?? கடவுளை மனிதன் பாா்க்கவில்லை, இன்னும் பூமியில் கூட சாதாரணமாக பல விசயங்களை மனிதனால் பாா்க்கமுடியவில்லை, பலவற்றை கேட்க முடியவில்லை என்பதும் உண்மையே!!! இப்படியிருக்க கடவுளுடைய இலக்கணத்தை அறிய, கடவுள் நமக்கு அருளிய பகுத்தறிவு மூலம் சிந்தித்தாலே போதுமானது ..
இப்போது நான் உங்களிடம் மூன்று கேள்விகளை கேட்கிறேன், இந்த கேள்விக்கு நடுநிலையாக சிந்தித்து விடை காணுங்கள், அதுவே ஏக இறைவனை பற்றிய அறிய போதுமானதாகும்..
1) அந்த ஏக இறைவனுக்கு சில-பல தேவைகள் இருக்கலாமா?
2) அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஓரு/பல்வேறு மனைவிகள்) குடும்பங்கள், ஆசைகள்,இச்சைகளை கொண்டவரா???
3) மனிதனால், இறைவனை பாா்க்கமுடியுமா??
இக்கேள்விக்கு பகுத்தறிவு ரீதியான முறையில் சிந்தித்து பாா்த்தால் சரியான முறையில் நாம் நம்பிய ஏக இறைவனை இன்னும் சரியான முறையில் அனுகலாம்..
1) அந்த இறைவனுக்கு சில-பல தேவைகள் இருக்கலாமா??
நாம் பல தேவைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிர் வாழ தண்ணீர், உணவு, சூரியன், மரம் செடி கொடிகள் எல்லாம் தேவை.. இது போன்று கடவுளுக்கு தேவைகள் இருக்காலாமா??? கடவுளுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறீா்களா??? தண்ணீர் இல்லையென்றால் தாகத்தால் கடவுள் இறந்துவிடுவாரா என்ன??? அப்படியே தண்ணீா் , உணவு தேவை என்று நினைத்தால், இன்னும் அவர் சிறுநீா் கழித்தே ஆக வேண்டும், இன்னபிற இயற்கை தேவைகளை பூர்த்திசெய்தே ஆகவேண்டும் என்ற பாதகமான , இன்னும் கடவுளை கொச்சைப்படுத்தும் செயல்கள் இவை. நம்மினுள் இருக்கும் பலவீனங்களை கடவுளுக்கும் கற்பனை செய்வது நியாயமா??
உலகில் யாரையெல்லாம் கடவுள் என்று மக்கள் சொல்கிறார்களோ, அவர்கள் சிந்திக்கவேண்டிய விடயம், அந்த சொல்லப்படும் கடவுள்(?),இங்கு இருக்கையில் பல தேவைகளுக்குள் உள்ளானவர் தான், அவர்கள் தங்களது பசியை போக்க உணவு உண்டவர்கள் தான்,மனிதனால் தவிர்க்கயிலாத இயற்கை தேவைகளை நிறைவேற்றி இருப்பார்கள். அவர்களெல்லாம் மனிதரே அன்றி வேறில்லை. இன்னும் பல நல்ல மனிதர்கள் கூட கடவுளாக்கப்பட்டுள்ளனா், (நமது மூதாதையர்கள்,அறியாமையின் காரணத்தால் அவர்களின் மூதாதையர்களை, ஊர் காவலர்களை ,நல்லவர்களை கடவுளாக, ஆக்கியது போல). மனிதர்கள் என்றும் மனிதர்களே!! அவனால், அவனது மரணத்தை கூட தடுக்கமுடியாது.
2) அந்த ஏக இறைவனுக்கு நம்மை போலவே (பெற்றோர், குழந்தைகள், ஒரு/பல்வேறு மனைவிகள்) குடும்பங்கள், ஆசைகள், இச்சைகளை கொண்டவரா???
பெற்றோர் இருந்தால் தானே குழந்தை வரமுடியும்.! அப்படியென்றால் கடவுள் எப்படி வந்தாா்?? அவரை படைத்தவர் யாா் என கேள்வி வருவதால் தான், கடவுளுக்கு பல தலைமுறைகளை வாாி வழங்கிவிட்டோம். முதலில் குழந்தை என்பது எதற்கு?? நாம் வயது முதிர்ந்தவுடன் நம்மை பாா்த்துக் கொள்ள, பரம்பரையை பெருக்க இன்னும் நம் சந்தோஷத்துக்கும் தான் … கடவுளுக்கு குழந்தை தேவையா?? அவருக்கும் முதுமை தட்டுமா என்ன???? பிறகு ஏன் குழந்தை ??? ஏன் மனைவி ?? மனைவி எதற்கு? கடவுள் என்ன ஆணா?? அவர் மாபெரும் சக்தி அவ்வளவே!!
அப்படியே நீங்கள், கடவுளுக்கு குழந்தை இருப்பதாக எண்ணினால்,அதனுள் உள்ள இன்னொரு விபரீதத்தை சந்திக்க நேரிடும், கடவுளுக்கு குழந்தை என்ற ஒன்று இருந்தால் அதுவும் கடவுள் தானே, அதற்கு பின், தலைமுறை தலைமுறையாய் பிறப்பதெல்லாம் கடவுள் தானே!? சில லட்சம் வருடமாக வாழ்ந்து வரும் மனிதன், தற்போது 800 கோடி பேரை கொண்ட மக்கள் தொகையை எட்டியுள்ளான், பல கோடான கோடான கோடி ஆண்டுகளாக, தலைமுறைகளை வாா்த்தெடுத்தால்,நிலைமை என்னவாகும் என யோசித்து பாருங்கள், நம் மக்கள் தொகையை விட எண்ணிக்கை எங்கேயோ போய்விடும், கடவுள் நம்மை பாா்த்துக் கொள்வாரா அல்லது அவர்களை பாா்த்துக் கொள்வாரா?
3) மனிதனால், இறைவனை பாா்க்கமுடியுமா??
அனைத்து மனிதர்களுக்கும், (சில குறைப்பாடு உடையவர்களை தவிர்த்து) மனித திறன்கள் என்பது சமமே.. எல்லோருக்கும் 571 பிக்ஸல் லேன்ஸ் திறன் கொண்ட கண்கள் தான். (குருடருக்கு கண் பொருத்துனாலும் மனித கண் திறனை மிஞ்சும் வகையில் வைக்க இயலாது) , அனைவருக்கும் மூளை, 1 கி,300 கிராம் தான், தனுஷ் ஓரு படத்தில் ” எனக்கு மட்டும் 1கிலோ,500 கிராம் ” என கூறியது போல் வேறு யாராலும் சொல்லமுடியாது.. இப்படி திறன்கள் ஒப்பீட்டில் அனைவரும் சமம் தான். இப்படிப்பட்ட சாமானிய மனிதனால் இறைவனை பாா்க்கமுடியுமா???
நீங்கள் இறைவனை பாா்த்ததுண்டா??? இல்லை!!! பின்னா் யாா் தான் பாா்த்தது?? கண் பாா்வைக்கும் ஓர் எல்லை உண்டு, நமது பிரபஞ்சத்தில் லட்சம் கோடி வீதிகள் உள்ளன, அதிலிருக்கும் பால்வெளி வீதியில் நாம் இருக்கிறோம், இங்கிருந்து நம்மால் வெறும் மூன்று வீதிகளையே பாா்க்கமுடியும், அவை: 1.Andromeda Galaxy, 2. Large Magellenic cloud 3. Small Magellenic cloud. இதை தவிர்த்து மிச்சமுள்ள லட்சம் கோடி வீதிகளை பாா்க்கவேமுடியாது. இதையெல்லாம் விட்டு அப்பாற்பட்ட இறைவனை யாரைய்யா பாா்த்தது??? பல படைப்புகளையே பாா்க்கமுடியவில்லை!!! படைப்பாளனை பாா்த்துவிடமுடியுமா? இதையெல்லாம் தாண்டி நம் மக்கள், இறைவனுக்கு உருவம் கொடுத்தும் விட்டனா் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
நாம், நம் இஷ்டத்திற்கு ஏற்றார் போல், நாமாக ஓர் உருவமாக அமைத்துக்கொண்டு, அது தான் கடவுள் என நம்பினால், அது கடவுளாகி விடுமா?? உங்கள் ஃபோனையோ, கணினியையோ கடவுளென நீங்களாக நினைத்துக் கொண்டால், அது கடவுளா?? அது சாதாரண சாதனம் தானே!!! அது போல தான். ஓா் உயா் அதிகாரியை பாா்த்து, ஏய் மாடே!!! என்று சொன்னால், யாரை பாா்த்து மாடு என்று சொன்னாய்?? நான் இன்ன உயர் அதிகாரி என கோவத்துடன் சொல்வார்தானே!! நாம் விலங்கினை கடவுளென சொன்னால், அது சரியா? விலங்குகளோ இயற்கையோ நமக்கு அதிக பயன் தருகிறது.உண்மை தான்; அந்த பயனை தந்த விலங்கினையோ இயற்கையை நன்றி செலுத்தக்கூடாது. அதனை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்திட வேண்டும்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், படைப்பாளனை, படைப்பினம் படைக்க இயலுமா??? எவ்வளவு பெரிய அறிவீனம் என்று உணரவேண்டாமா??
இன்னும் சிலைவடிப்பவருக்கு வேலை பழு அதிகமாக இருந்தால், ஒரு குவாட்டா் போட்டு சிலை செதுக்குவதை நம்மால் பாா்க்கமுடிகிறது. அதையே கொண்டு போய் வணக்கஸ்தலத்தில் வைத்தால், அச்சிலையையும் திருடிக் கொண்டுபோக ஓரு கும்பல், அச்சிலையை கடவுளென கற்பனை செய்துக்கொள்ளும் நாம், அச்சிலை திருடப்பட்டால், கடவுளை திருடிவிட்டதாக நம்புகிறோமா என்ன?? அடுத்து நாள் செய்திகளில் கூட, சிலை திருட்டு என வருகிறதே தவிர கடவுள் திருட்டு என வருவதில்லை. நம்முடைய செயல்களே நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் சான்றாக இருப்பதை விளங்கவேண்டாமா?
இன்னும் இதையெல்லாம் தாண்டி சிலைகளையெல்லாம், அதற்கு கையில் ஆயுதத்தையும் கொடுத்துவிட்டோம்.. கடவுளுக்கு எதுக்குப்பா ஆயுதம்? யாரை போட்டு தள்ள,?? சிந்தியுங்கள் அன்பா்களே!!!!
நாம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம்!!! பல கல்வியாளர்கள், விஞ்ஞானிகளை கொண்ட சமூகத்தில் இருக்கிறோம், இனியும் நாம் இது போன்ற அறிவீனமான செயல்களை நாம் செய்யலாமா?? நமது தாய் தந்தையா் செய்வதால் நாமும் செய்வதா?? அவர்கள் எட்டாவதோ, பத்தாவதோ படித்திருப்பாா்கள், நானும் அவா்கள் அளவுக்கு தான் படிப்பேனென சொல்வோமா?? அவர்கள் அளவுக்கு தான் சிந்திப்பேன் என சொல்வோமா?? கடவுளை, உருவமாக வடித்து கற்பனை செய்து வணங்குவது சரி என உங்களுக்கு இன்னும் தோன்றுகிறதா???
உலகமத கிரந்தங்களை ஆராய்வோமானால் அவையனைத்தும் ஏக இறைவனை எவரும் கண்டதில்லை என்றே கூறுகிறது.
இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை – (அதர்வவேதம் 32:3)
ஆதிபகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களல்ல. அசூரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல’ (பகவத்கீதை 10:14)
அப்படியிருக்க காணாத ஒரு வஸ்துவுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்? உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் ஒரு நாயை அல்லது பூனையை போன்ற உருவம் வடித்து வைத்து இது தான் நீங்கள் என்று கூறுவார்களானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய பாரத அதிபரை காணாத ஒருவர் அவரை நினைவில் நிறுத்த ஒரு குரங்குச் சிலையை வடித்து வைத்தால் அதை அவர் ஏற்றுக் கொள்வரா? மாட்டார். ஏன்? குரங்கும், நாயும் மனிதனை விட தரம் தாழ்ந்தது என்று நாம் கருதுவதால் ஆகும். நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்மைவிட தரம் தாழ்ந்த இனத்தோடு ஒப்பிடும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அது தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். அப்படியிருக்க இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு மட்டும் இவ்வுலகத்தில் உள்ள அற்பவஸ்துக்களில் ஒன்றைப்போல் உருவாக்கி இது தான் நம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தா என்றால் அது எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்? படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம்தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா?
நேற்று வரை ஒரு கல் சாதாரனமாக இருந்துக்கொண்டிருக்கும். அல்லது அது மேல் எத்தனையோ மனிதர்களாலோ அல்லது மிருங்களாலோ அசிங்கம் செய்யப்பட்டிருக்கும். அடுத்த நாள் அந்தக் கல்லை ஒரு சிற்பி எடுத்து இவர்கள் விரும்புவது போல் இவர்கள் விருப்பப்பட்ட சிலையை வடித்துக்கொடுத்ததும் அந்தகல்லுக்கு சக்தி வந்துவிடுவதாகவும், உடனே அதை வணங்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவிதத்தில் நியாயமாகும்? அந்தக் கல் நேற்று வரையிலும் கேட்பாறற்று கிடந்ததே! அப்பொழுதெல்லாம் அதை தெய்வமாக பார்க்காத மனிதன், அதை அவர்கள் விரும்புவதுபோல் சிலையாக வடிக்கப்பட்டதும் உடனே வணங்குவது தவறில்லையா??? ஆக சிலைவணக்கம் எனும் செயல், நம்மை படைத்த ஏக இறைவனுக்கு இழிவுப்படுத்தும், துரோகம் செய்யும் செயல்.. நாம் சுவாசித்து கொண்டிருக்கும் காற்று,பாா்க்கும் கண், படித்துக்கொண்டிருக்கும் நாவு, சிந்திக்கும் மூளை, இது போன்ற அனைத்தையும் கொடுத்த ஏக இறைவனை இழிவாக்கலாமா???
சரி, உருவ வழிபாடு தவறு என்றால், பின்ன எப்படி தான் கடவுளை வணங்குறது?.
சாஷ்டாங்கம் என்றால் எட்டு அங்கம் என அா்த்தம், எட்டு உடல் உறுப்புகளை தரையில் படும்வகையில் முகங்குப்புற விழும் நிலையில் இறைவனை தொழுவது, மிகவும் விரும்பத்தக்கது. இதுவே இஸ்லாமியர்களின் தொழுகையில், கடவுளை வணங்குதலில் ஓர் அம்சமாகும், இதை தான் ஓரு நாளை ஐந்தாக பிரித்து, ஐவேளையும் “ஏக இறைவனை (அரபியில் அல்லாஹ்) ” வணங்கி வருகின்றனா்.
உருவ வழிப்பாடு/ சமாதி வழிபாடு எனும் தவறான செயலை சிந்தித்துணா்ந்து , ஏக இறைவனிடம் நேரடியாக கோாிக்கை வைப்போம். இதுவே ஏக இறைவனுக்கு சரியான முறையில் கீழ்படிதல் ஆகும். “ஏக இறைவனுக்கு கீழ்படுதல் ” என்பதை அரபியில் மொழிப்பெயர்த்தால் அதன் பெயர் தான் இஸ்லாம்.
அல்லாஹ் எனும் அரபு நாட்டு கடவுளை வணங்கும் மக்களை கொண்ட மதமென நினைக்கிறீர்களா??
ஆங்கிலத்தில் கடவுளை குறிக்க ” God ” என்போம். ஆகையால் இந்த வாா்த்தையின் அர்த்தம், ஆங்கிலேயேரின் கடவுளென எண்ணுவீர்களா?? இல்லை!! ஆங்கிலேயரின் மொழியில் கடவுளுக்கு காட்(God) என தானே விளங்குவீர்கள், அது போல “அல்லாஹ்” என்பது அரேபியர்களின் கடவுள் என விளங்கக்கூடாது, அரபி மொழியில் கடவுளை குறிக்க ஓரு சொல் என தான் விளங்க வேண்டும்