ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பதை பார்க்கும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் அவர்களோடு சேர்ந்து நாமும் நோன்பு வைக்க வேண்டும் என்று சகோதரத்துவ அடிப்படையில் ஆசை படுகிறார்கள்
அப்படி ஆசைப்பட்டு வைக்கும் சகோதர்கள் முஸ்லிம்கள் நோன்பு வைப்பது போல் முழுமையாக நோன்பு வைக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது ஏனென்றால் அவர்களுக்கு நோன்பு எப்படி வைக்க வேண்டும் நோன்பு ஏன் கடமை என்பதை நாம் தெளிவு படுத்தாமலே இருக்கிறோம் ஆதலால் நோன்பு எப்படி வைக்க வேண்டும் என்பதை சற்று விளக்கினால் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதர்களும் நோன்பு வைக்க நினைக்கும் முஸ்லீம் அல்லாத சகோதர்களும் நோன்பை முழுமையாக வைப்பார்கள் இன்ஷா அல்லாஹ் ( இறைவன் நாடினால்)
எதற்காக நோன்பு நோற்க வேண்டும்..?
இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். லாஜிக்’ஆக யோசித்தால் சரியானது போல் தோன்றலாம்.
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமல்ல, நோன்பு வைத்திருக்கையில் மிடில் கிளாஸ் மக்களுக்கும், இது போன்ற எண்ணம் வரத்தான் செய்யும் .. இதுவே உண்மையான காரணமென்றால், ஏழைகள் ஏன் நோன்பு வைக்க வேண்டும்..?? என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ..?? ஆக இது உண்மையான காரணம் கிடையாது.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை இறைவனே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் 2:184)
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான். நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் இறைவன் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் இறைவன் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்பிக்கை வைத்து .
ஹராமான (தடுக்கப்பட்ட) காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான(ஆகுமாக்கப்பட்ட) பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1903, 6057
ரமழான் மாதத்தை இறைவன் தேர்ந்தெடுத்தது ஏன் ?
இஸ்லாமிய மாதங்கள் மொத்தம் 12 அதில் ஒரு மாதத்தின் பெயர் தான் ரமழான் மற்ற மாதங்களை விட்டுவிட்டு இந்த மாதத்தை இறைவன் தேர்ந்து எடுத்தது ஏன் என்று இறைவனே கூறுகிறான்
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
(அல்குர்ஆன் 2:185)
மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான். மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான். இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.
நோன்பு வைத்த நிலையில் என்ன செய்ய வேண்டும் ?
பொதுவாக நாம் நல்ல செயல்களை செய்வோம் அதையே நோன்பு நேரத்தில் அதிகமாக செய்ய வேண்டும்
இறைவனிடம் நாம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
நோயாளியை நலம் விசாரிப்பது
இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் அருட்கொடை யோசித்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்
அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும்
இறைவனின் வேதத்தை அதிகமாக ஓத வேண்டும்
அரபி தெரியாவிட்டால் நம் தாய்மொழியில் பொருளை வாசிக்க வேண்டும்
இது போன்ற செயல்களை முடிந்த வரை செய்யுங்கள் ஒருவேளை இவற்றை செய்ய முடியாவிட்டாலும் தீய செயல்களில் ஈடு படாமல் இருப்பது முக்கியமானது
நோன்பு எப்படி வைக்க வேண்டும் ?
முஸ்லிம்கள் நோன்பு வைப்பதற்கு அதிகாலை 4 மணி அளவில் எந்திரித்து உணவு உண்பார்கள் அந்த நேரத்தில் உணவு உண்டு நோன்பு வைப்பதால் இறைவனின் அபிவிருத்தி இருக்கின்றது என்று முஹம்மது நபி அறிவித்தார்கள் ( புஹாரி – 1789 )
அதிகாலை எந்திரித்து நோன்பு வைப்பதற்கு பெயர் ”ஸஹர்” என்பதாகவும்
ஸஹர் நேரத்தில் நோன்பு நோற்ற பிறகு மாலை 6:00 மணி வரையிலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் உணவு உண்ணாமலும் இருக்க வேண்டும்
மாலை 6:00 மணிக்கி மேல் நோன்பு திறப்பதற்கு பெயர் ”இஃப்த்தார்” ஆகும்
உங்கள் ஊரில் ஸஹர் மற்றும் இஃப்த்தார் நேரத்தை https://www.islamicfinder.org/ramadan/ என்ற இணையத்தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்
இதில் குறிப்பிட்டு இருக்கும் ஸஹர் நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு முடிக்க வேண்டும் அதன் பிறகு இஃப்த்தார் நேரத்தில் நோன்பை திறக்க வேண்டும் ( சாப்பிட வேண்டும்)
இன்னும் நேரத்தை இலகுவாக புரிந்து கொள்ள நினைத்தால் அதிகாலை மசூதியிலிருந்து “அல்லாஹு அக்பர்” என்ற பாங்கு ஓசை கேட்கும் வரை மக்கள் சாப்பிடுவார்கள் பிறகு மாலை நேரத்தில் அல்லாஹு அக்பர் என்ற பாங்கோசை கேட்டவுடன் நோன்பைத் திறந்து விடுவார்கள்
இஃப்த்தார் நேரத்தில் நோன்பை திறக்கும்போது முதலில் பேரிச்சம் பழங்களை வைத்து நோன்பு திறக்க வேண்டும் (திர்மிதி – 632 )
நோன்பை முறிக்கும் காரியங்கள் ?
நோன்பு வைத்த நிலையில் சில காரியங்கள் செய்தால் நோன்பு முறிந்து விடும் அதை தெரிந்து கொண்டால் நோன்பை நாம் சரியான முறையில் பாதுகாக்கலாம்
வேண்டுமென்று உணவு உண்பது குடிப்பது கூடாது – (அல்குர்ஆன் 2:187 ) தெரியாமல் தண்ணீர் பருகினாலோ உணவு உண்டாலோ தவறு இல்லை
நோன்பு வைத்த நிலையில் மனைவியோடு உடலுறவு கொள்ள கூடாது – (புஹாரி – 1800)
வேண்டுமென்று வாந்தி எடுப்பது நோன்பை முறிக்கும் – (இப்னு மாஜா – 1666 )
மாதவிடாய் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டால் நோன்பு முறியும் -( புஹாரி – 1815 )
மேல் சொன்ன விஷயங்கள் நோன்பை முறிப்பதால் அதை கவனத்துடன் பார்த்து கொள்ளுங்கள்
நோன்பு வைப்பது யார் மீது கடமை :
பருவ வயதை அடைந்தவருக்கு – ( அபு தாவுத் – 3823)
அறிவு சுவாதீனம் இருக்க வேண்டும் – ( அபு தாவுத் – 3823)
உடல் நலத்துடன் இருக்க வேண்டும் – (அல்குர்ஆன் 2:185 )
நோன்பு வைக்க அடிப்படை தகுதி :
நோன்பை நீங்கள் வைக்க நினைத்தால் அடிப்படையாக உங்களிடம் இருக்க வேண்டிய கடமை நீங்கள் ஒரு இறைவனை வணங்குபவராக இருக்க வேண்டும், அந்த இறைவனுக்கு எந்த ஒரு தேவையும் இல்லை என்று நம்ப வேண்டும்,எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் ஆதலால் அவனுக்கு பெற்றோர்கள் இல்லை அவனுக்கு பிள்ளை இல்லை என்பதையும்,இறைவனுக்கு நிகராக எவரும் இல்லை என்பதை நம்ப வேண்டும்,
சுருங்க சொல்வதாக இருந்தால் உண்மை இறைவனுக்கு கீழ்ப்படிந்தவனாக இருக்க வேண்டும் அதற்கு அரபியில் அழைக்கும் பெயர் தான் ”முஸ்லீம்”
முஸ்லிமாக இல்லாமல் நீங்கள் வைக்கும் நோன்பு இறைவனின் பார்வையில் பசித்து இருப்பதாக தான் இருக்குமே தவிர இறைவனின் அடியான் வைக்கும் நோன்பாக இது இருக்காது ஆதலால் இஸ்லாத்தை குறித்து ஆய்வு செய்யுங்கள் உண்மையான இறைவனை குறித்து யோசியுங்கள் இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி கொடுப்பானாக