#இறைவன் ஏன் #அநியாயங்களைஅனுமதிக்கிறான்?
= இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்கு அக்கிரமங்கள் நடக்குமா?
= இறைவிசுவாசிகளுக்கு ஏன் நோய்கள் மற்றும் இன்னபிற துன்பங்கள் நேர்கின்றன?
= கடவுளை நம்பாதவர்களும் கடவுளைக் கும்பிடாதவர்களும் நன்றாகத்தானே வாழ்கிறார்கள்? அவர்களுக்குக் கடவுளை வணங்காததால் எந்த இழப்பும் நடப்பதில்லையே?
இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுவது இயல்பே. ஆனால் பெரும்பாலோர் இது கடவுள் நம்பிக்கை. இதில் கேள்விகள் கேட்கக்கூடாது. கடவுளைப் பற்றிய நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி தங்களைத்தாங்களே சமாதானப்படுத்தி சிந்திக்காமல் இருந்து வருகிறார்கள். இது பற்றிய தெளிவின்மை நாளடைவில் இவர்களை நாத்திகத்திற்க்குக் கொண்டு சென்று விடுகிறது.
ஆனால் உண்மையான இறைமார்க்கம் இவற்றுக்குத் தெளிவான விளக்கங்களைத் தருகிறது. பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இதற்கான தெளிவைப் பெறவைக்கிறது.
மேற்க்கண்ட சந்தேகங்கள் எழுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால். அது இவ்வுலகம்தான் எல்லாமே, இதற்கப்பால் ஒன்றும் கிடையாது என்ற குறுகிய கண்ணோட்டம்தான்!
ஒரு கிணற்றில் பிறந்து வளர்ந்த இரண்டு தவளைகள் அந்தக் கிணற்றின் ஆழ அகலங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தன. அப்போது மேலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக இறக்கப்பட்ட வாளி தண்ணீரோடு இத்தவளைகளையும் அள்ளிச்சென்றது. கிணற்றுக்கு வெளியே வந்து விழுந்த தவளைகள் சுற்றும்முற்றும் பார்த்து வியப்படைந்தன. அப்போதுதான் தங்கள் கிணறு என்பது இவ்வூரில் எவ்வளவு சிறிய இடம் என்பதை உணர்ந்தன.
இப்போது அந்தத் தவளைகளை ஒரு பறக்கும் வாகனத்தில் ஏற்றிச் மேலே சென்று காண்பித்தால் அப்போது அவை உணரும் இந்த ஊர் என்பது மாவட்டத்தின் ஒரு பாகம் என்பதை. இன்னும் மேலே செல்லச் செல்ல தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் புலப்படும். பிறகு இந்தியா, ஆசியாக் கண்டம், இன்ன பிற கண்டங்கள் புலப்படும், இன்னும் மேலே செல்லச் செல்ல பூமி ஓர் பந்து போன்ற உருண்டை என்பதும் இந்த பூமி சூரியகுடும்பத்தின் ஓர் அங்கம் என்பதும் இப்பரந்த பிரபஞ்சத்தின் ஒரு மிக மிக நுண்ணிய ஒரு துகளே தங்கள் வாசித்திருந்த பூமி என்பதுமெல்லாம் அந்த கிணற்றுத்தவளைகளுக்குப் புலப்படும்.
அந்தக் கிணற்றுத் தவளைகள் போன்ற நிலையில்தான் நம்மில் பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் தங்கள் அறிவுக்கும் சிந்தைக்கும் பூட்டுபோட்டு அடக்கி வைத்து இவ்வுலகின் இயல்பை சிந்திக்க மறுக்கிறோம். இது தவறு. இப்படிப்பட்ட குறுகிய சிந்தனை இப்படிப்பட்டவர்களை இறைவனைப் பற்றியும் அவனது திட்டங்களைப் பற்றியும் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இவ்வாழ்க்கையின் உண்மை நிலையை கண்மூடிக்கொண்டு மறுப்பதன் விளைவாக முடிவில் அவர்கள் நரக நெருப்புக்கு இரையாகிறார்கள்.
வாருங்கள் சற்று பரந்த மனப்பான்மையோடு சிந்திப்போம்…..
இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:
اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ
وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ
النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ
الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ
وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ
.நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 2:164)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? அவ்வாறு சிந்திக்கும்போது இறைத்தூதர்க்ளும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப் பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன.
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்! எனவே இங்கு செல்வமும் வறுமையும் நல்லவையும் தீயவையும் நியாயமும் அநியாயமும் நம் முன் மாறிமாறி வரும்.
நல்லோர்களுக்குத் துன்பமும் தீயோர்களுக்கு இன்பமும் கிடைப்பதெல்லாம் இங்கு சகஜம். ஆனால் அவற்றைப் பார்த்துவிட்டு அவசரமாக எந்த முடிவுக்கும் நாம் வந்துவிடக்கூடாது. ‘இறைவனே இல்லை’ என்றும் இறைவன் இருந்திருந்தால் இந்த அநியாயம் நடக்குமா?’ என்றெல்லாம் பிதற்றுவது அறியாமையின் வெளிப்பாடுகளே!
உடனுக்குடன் தண்டித்தால் என்ன ஆகும்?
ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா?
அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான். அக்கூடத்திற்குள் வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை? இறைவனே தன் திருமறையில் கூறுகிறான்.
وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ
عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ
فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً وَّلَا
يَسْتَقْدِمُوْنَ
மனிதர்களுடைய அநீதியின் காரண மாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:61)
وَرَبُّكَ الْغَفُوْرُ ذُوْ الرَّحْمَةِ ؕ لَوْ يُؤَاخِذُهُمْ
بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ ؕ بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ
يَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْٮِٕلًا
உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள். .
(அல்குர்ஆன் 18:58)
என்று தணியும் நீதியின் வேட்கை?
இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன் முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தொல்வியுறுவோருக்கு நரகமும் விதிக்கப்படும்.
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ
اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ
الْجَـنَّةَ فَقَدْ فَازَ ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ
الْغُرُوْرِ
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் 3:185)
ஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மயக்கத்தில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.
நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)
அதாவது ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டித் தாக்கியிருந்தால் முட்டப்பட்ட ஆடு முட்டிய ஆட்டைத் தாக்கும் வாய்ப்பை அன்று இறைவன் வழங்குவான்.
இவ்வுலகைப் பொறுத்தவரையில் இதுதான் இறைவனின் ஏற்பாடு
இதைத் தட்டிக்கேட்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது.
நாம் மிகமிக அற்பமானவர்கள். நம் சிற்றறிவைக் கொண்டு இப்பரந்த பிரபஞ்சத்தின் படைப்பாளனின் திட்டங்களை ஆராயவும் எடைபோடவும் முடியாது என்பதை ஒப்புக்கொண்டு அவன் தனது தூதர்கள் மூலமாக எதை அறிவித்துத் தருகிறானோ அவற்றை அப்படியே ஏற்பதுதான் அறிவுடைமை!
நன்றி : திருக்குர்ஆன் நற்செய்தி மலர்