திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள். திருக்குர்ஆன் ‘காஃபிர்’ என்று தங்களை ஏசுவதாக எண்ணுகிறார்கள். அப்படியொரு தவறானப் பிரச்சாரம், திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது. காஃபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் இல்லாத போது அதை ஏசும் சொல் என்று சொல்வது எப்படி நியாயம் ??? இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்தவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க ‘முஸ்லிம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்து மதத்தை பின்பற்றாதவரை இந்து அல்லாதவர் என்போம் கிறிஸ்தவத்தை பின்பற்றாதவரை கிறிஸ்தவர் அல்லாதவர் என்போம் அது போல் இறைவன் ஒருவன் என்பதை நம்பாமல் அவனுடைய வழிகாட்டல்களை புறக்கணிப்பவர்களை நாம் முஸ்லிமல்லாதவர் என்று தானே சொல்வோம் அந்த சொல்லிற்கு அரபியில் பெயர் தான் ”காஃபிர்” என்பதாகும். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் சொந்த நாட்டு மக்களை Native/Citizen என்றும் வேறு நாட்டு மக்களை Foreigner என்றும் சொல்லலாம். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த இந்தியர் அல்லாதவரைக் குறிக்க Foreigner என்று குறிப்பிட்டால் சம்பந்தப்பட்டவர் வருத்தப்படுவதில்லை.(அமெரிக்காவில் அமெரிக்கரல்லாதவரை ‘Alien’ என்கிறார்கள். முறையாகச் சொன்னால் இந்த வார்த்தைக்கு தான் முதலில் இவர்கள் வெகுண்டு எழ வேண்டும்.) இது ஒரு குறிச்சொல் என்பதை அவர்கள் புரிந்திருப்பதால் அவர்களுக்கு வருத்தமில்லை. இதே அளவீடுதான் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவரைக் குறிக்க காஃபிர் என்று சொல்லும் போதும் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் அருளப்பட்டக் காலத்தில், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இன்னும் இஸ்லாத்தை ஏற்காத குறைஷியர்கள் என பல்வேறுபட்ட சமூகத்தினர் இருந்தார்கள். திருக்குர்ஆன் ”காஃபிர்” என்று அழைப்பது முஸ்லிம் அல்லாதவர்களையே – அதாவது தங்களையேக் குறிப்பிடுகிறது என்பதை அன்றைய மாற்று மத சமுகத்தினர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்ததால் இதை ஆட்சேபிக்கவில்லை.”காஃபிர்” என்ற சொல் என்பது திட்டுவதோ, ஏசுவதோ அல்லாது, ஏக இறைவனை மறுத்தவர்களைக் குறிப்பிடும் சொல் என்பதை அவர்கள் விளங்கியிருந்தார்கள். அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் அல்லாதவர்கள் உலக நாடுகளில் இன்றும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்றுமே ”காபிர்” என்ற சொல்லை, தவறாக இன்றுவரை விளங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”காஃபிர்” என்ற வார்த்தையைப் பற்றிய பொருள் புரியாமல் அந்த வார்த்தையை வெறுப்பது, பிற மொழி பற்றிய புரிந்துணர்வு இல்லாமையால், பிற மொழியின் ஒரு வார்த்தையின் மீது ஏற்பட்ட அறியாமையின் வெறுப்பாகும். சுருங்க சொல்வதாக இருந்தால் ஒரு இறைவனை நம்பி அவனின் போதனைகளை பின்பற்றுபவன் முஸ்லீம் என்போம் ஒரு இறைவனை நம்பாமல் அவனின் கட்டளைக்கு மாறு செய்பவரை முஸ்லீம் அல்லாதவர் அதாவது அரபியில் காஃபிர் என்போம்.