புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2:184
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குர்ஆன் 2:185
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்
நோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான். மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான். இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.
நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
(இம்மாதத்தில் குர்ஆன் ஐ ஓதினால் மிக அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)
நோன்பின் நோக்கம்
எதற்காக நோன்பு நோற்க வேண்டும்..?
இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். லாஜிக்’ஆக யோசித்தால் சரியானது போல் தோன்றலாம்.
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமல்ல, நோன்பு வைத்திருக்கையில் மிடில் கிளாஸ் மக்களுக்கும், இது போன்ற எண்ணம் வரத்தான் செய்யும் .. இதுவே உண்மையான காரணமென்றால், ஏழைகள் ஏன் நோன்பு வைக்க வேண்டும்..?? என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ..?? ஆக இது உண்மையான காரணம் கிடையாது.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான். நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான (தடுக்கப்பட்டட) காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான(ஆகுமாக்கப்பட்ட) பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1903, 6057
முஸ்லிம்கள் நோன்பு குறித்ததான இரு வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பார்கள். அது
ஸஹர்
இஃப்தார்.
ஸஹர் என்பது நோன்பு வைக்கும் போது உண்ணுவது ஆகும்; அதாவது, ஃபஜர் (அதிகாலை) தொழுகையின் பாங்கு /அதான் (தொழுகைக்கான அழைப்பு) கொடுக்கப்படுவதற்கு முன்பு உண்ணுவதை ஸஹர் என்று சொல்லுவார்கள்.
இந்த ஸஹரில் உண்ணுவதில் அபிவிருத்தி இருக்கிறது என்று முஹம்மது நபி ஸல் கூறியுள்ளார்கள். புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களில் சிலர், வீட்டிற்கு தெரியாமலேயே நோன்பு வைக்கும் சூழல் இருக்கலாம். (எனக்கு அப்படி தெரிந்த சிலர் இருந்தனர்; அவர்களோ சில சிற்றுண்டிகளை வைத்து ஸஹர் செய்வார்கள்; சிலர் ஸஹர் சாப்பிடா(முடியா)மலேயே நோன்பு வைத்துவிடுவார்கள்) உங்களால் முடிந்தளவு முயற்சி செய்து சஹர் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் ..!! சில நாட்களுக்கு தான் இவ்வாறான சூழல் இருக்கும். இன் ஷா அல்லாஹ் விரைவில் சூழல் மாறும்.
இஃப்தார் என்பது நோன்பு துறப்பதை குறிப்பதாகும்.. அதாவது மக்ரிப் (மாலை 6:15க்கு மேல் தொழப்படும்) தொழுகையின் அழைப்பின் நேரத்தின் போது சாப்பிடவேண்டும். இந்த சாப்பிடும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். அப்பொழுது கேட்கப்படும் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்பது நபிமொழி.
ஸஹர் நேரமும் இஃப்தார் நேரமும் மாவட்டதிற்கு மாவட்டம் சற்று மாறுபடும். உங்கள் ஊரில் உள்ள முஸ்லிம்களிடம் அதனை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். இன்னும் எச்சி முழுங்கினாலும், அடிப்பட்டு ரத்தம் வந்தால் நோன்பு முறிந்துவிடும் என்பதெல்லாம் கிடையாது ..மறதியில் தெரியாமல் எதையேனும் சாப்பிட்டாலோ, பருகினாலோ குற்றமாகாது. நோன்பை அப்படியே தொடரலாம். இன்னும் நோன்பு வைத்துக்கொண்டு குளிப்பதற்கோ உறங்குவதற்கோ முடி நகம் வெட்டுவதற்கோ , வேலை செய்வதற்கோ எவ்வித தடையுமில்லை.
இன்னும் இஃதிகாஃப் என்ற செயல் இருக்கிறது. ரமலானின் கடைசி பத்து நோன்பை பள்ளிவாசலிலேயே தங்கி (தொழுதல்/குர்ஆன் ஓதுதல் /இஸ்லாத்தை கற்றல் போன்ற) நற்செயல்கள் செய்வதாகும்.
இன்ஷா அல்லாஹ்…!! சகோதரா்களே, சகோதரிகளே நோன்பை முழுமையாக வைக்கக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக..!!
இன்னும் ரமலான் அல்லாத மாதங்களிலும் விரும்பினால் நோன்பு வைக்கலாம் ; திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை (விரும்பியவர்கள்) நோன்பு நோற்குமாறு நபிகள் நாயகம் வலியுறுத்தி உள்ளார்கள் ; அல்லது மாதத்தின் பிறை 13,14,15 லும் நோன்பு வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.